கல்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம்
கல்குளம் 603312 | செய்யூர் வட்டம் | செங்கல்பட்டு மாவட்டம்
- ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் நின்ற கோலம்
- தாயார், ஆண்டாள், சேனை முதலி, ஆழ்வார்கள், கருடன், அனுமன் தரிசனம்
- இரு நிலை விமானம் பரமபதநாதர், நரசிம்மர், லட்சுமி வராகருடன்
- 24 அடி கல் தீபஸ்தம்பம் | 16ம் நூற்றாண்டு ஆலயம்
- வடகிழக்கில் தீர்த்தக்கிணறும், நீண்ட சாலையும்.
ஆலய அமைவிடம்
சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்து பாலாறுப்பாலம் கடந்து, கூவத்தூருக்கு முன்பாக காத்தான்கடை சந்திப்பில் வலது திரும்பி, அணைக்கட்டு கிராமம் வழியாக ஈசிஆரில் இருந்து 15 கி.மீட்டரில் ஆலயம் வந்தடையலாம்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாண்டி, படாளம் சந்திப்பில் இடது திரும்பி செய்யூர் சாலை வழியாகவும் என் எச்ல் இருந்து 24 கி.மீட்டரில் ஆலயம் வந்தடையலாம்.
கல்குளம் கிராம வரலாறு
பல்லவர் காலந்தொட்டு சீர்சிறப்புடன் விளங்கிய பேரூர் இது. கிழக்கில் பல்லவகுளம் எனும், மதுராந்தகத்திற்கு ஏரிக்கடுத்த பெரிய ஏரியையும், மேற்கில் கல்குளம் ஏரியையும் கொண்டு மிகை நீராதாரம் கொண்டதாக விளங்குகிறது. அருகில் வியாக்ரபாதர் பூசனையாற்றிய ஸ்ரீ காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மடவிளாகம் கிராமமும் அந்நாளில் கல்குளம் சார்ந்ததே. சைவம், வைணவம் ஒருங்கே போற்றிய ஊரே கல்குளம்.
வியாக்ரபாதரெனும் புலிப்பாதமுனியின் திருவுருவச்சிலை, பலகைக்கல் ஏழுகன்னியர், ஐயனார் கல்யானைகள் இவ்வூரின் பழமைக்கோர் சான்று.ஆலய அமைப்பு
ஆலயம் தோராயமாக
22 மீ அகலமும் 42 மீ நீளமும் கொண்டு, கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்புறம் கல்லால் ஆன தீபஸ்தம்பம் அடியில்
நாற்புறமும் பெரிய திருவடியாம் கருடாழ்வார், சிறிய திருவடியாம் அனுமன் மற்றும் சங்கு,
சக்கரம் புடைப்புச் சிற்பங்களாகக் கொண்டு அழகுற விளங்குகிறது. அந்நாளில் தீபஸ்தம்பத்தின்
உச்சியில் திருவிளக்கிட்டு ஊரையே பிரகாசமாக்கிய ஆலயமிது.
நுழைவாயில்
கற்சுவரும், முன்னும்
பின்னும் கற்சிற்ப தூண்களுடன், தன்னை நாடி வரும் அடியவர்கள் அமர்ந்துச் செல்ல திண்ணைகள்
இருபுறமும் கொண்டு, கல் உத்திரம் தாங்கும் தளத்தின் முகப்பில் சங்கு சக்கர திரு நாமம்
மற்றும் இருபுறமும் கருடாழ்வார் வணங்கிய நிலை சுதைச் சிற்பங்களாய் அமைத்துள்ளனர்.
நாற்தூண்களில்
வினாயகர், மயில் வாகனத்துடன் முருகர், சைவம் போற்றிடும் வகையில் சிவலிங்கம் பூஜை செய்யும்
அடியார், மங்கலச்சின்னங்களாம் பதுமநிதி, சங்க நிதி, ஆழ்வார்கள், முனிகள் மற்றும் ஆலய
அடியவர்களை வரவேற்கும்விதமாய் இவ்வாலய அறம் ஆற்றிய மன்னரின் கரங்கூப்பிய திருவுருவம்
ஆகிய புடைப்புச் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்படுள்ளன.
ஆலயக் கருவறை
நுழைவாயில் கடந்து
சென்றால் பல் நல்லோர் நீரிறைத்து கோவிந்தனுக்கு திருநீராட்டிய வடகிழக்கு தீர்த்தக்
கிணறும், அருகில் தீபவிளக்கு பொருத்தும் கற்தூணும், பலிபீடமும், பின் பெரிய திருவடியாம்
கருடாழ்வார் மற்றும் சிறிய திருவடியாம் அனுமன் சன்னதியும் உள்ளன.
ஆலயம் கருவறை,
அர்த்தமண்டபம், முன்மண்டபம் என சிற்பக் கற்தூண்களுடன் எளிமையாக காட்சியளிக்கிறது. கருவறையில்
கோவிந்தராஜப்பெருமாள் அன்னை ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
முன்மண்டபத்தில் தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள், விஷ்வக்சேனர், அன்னை லட்சுமியை மடிமீதிருத்திய
நாராயணன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
விமானம்
இரு நிலை விமானம், வடக்கினில் பரமபத நாதரையும், தெற்கினில் லட்சுமி வராகரையும், மேற்கினில் கம்சவதம் புரியும் நரசிம்மரையும், கிழக்கினில் சீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜரையும் அழகிய சுதைச் சிற்பங்களாகக் கொண்டுள்ளது.
ஆலயத்தின் காலம்
ஆலயத்தின் அமைப்பு
மற்றும் சிற்பமைதியினைக் கொண்டு இவ்வாலயம் 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள்
காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.
அகிலமாளும் கோவிந்தராஜன் இதனையாற்றிய மன்னனின் கனவினில் தோன்றி இவ்வாலயம் அமைக்கச் சொன்னதாக ஓர் செவிவழிச் செய்தியுமுண்டு.
கிழக்கு மேற்காய் நீண்ட, கிழக்கு நோக்கிய ஆலயம், வடகிழக்கினில் தீர்த்தக் கிணறும், கிழக்கிலும், வடகிழக்கிலும் நீண்டுச் செல்லும் சாலையும் கொண்டிருப்பது வாஸ்து சாத்திரப்படி சொந்த வீடு வாங்க விழைவோர் வந்து வணங்கிட வேண்டிய ஆலயமெனவும் அத்துறை விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாலய குடமுழுக்கிற்கான
முயற்சிகளில் இவ்வூர் அடியவர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருக்க, கோவிந்தராஜரின் தாசானுதாசர்கள்
தம்மையும் இவ்வறப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
மேலதிக தகவல்களுக்கு:
-s.செந்தில்குமார் +91 9789822122
கல்குளம் கிராமம்.










Comments
Post a Comment